குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள மெக்டொனல்டு உணவு விடுதிக்கு கடந்த சனிக்கிழமையன்று தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றிருக்கிறார் பார்கவ் ஜோஷி.
அங்கு, பர்கர், கூல் ட்ரிங்ஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட எத்தனித்து, வாங்கிய கோகோ கோலாவில் இருந்து 2 சிப் மட்டுமே குடித்திருந்த போது திடீரென இறந்த பல்லி அதில் தென்பட்டிருக்கிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பார்கவும் அவரது நண்பர்களும் மெக்டொனல்டு ஊழியர்களிடம் சென்று விசாரித்த போது, அதனை திரும்பி பெற்றுக்கொண்டு அதற்கான பணமாக 300 ரூபாயை திருப்பி செலுத்திவிடுகிறோம் எனக் கூறியிருக்கிறார்கள்.
இதனால் மேலும் கோபமடைந்த பார்கவ் உள்ளிட்ட நண்பர்கள், எங்கள் உயிரின் விலை வெறும் 300 ரூபாய்தானா? நான் 500 ரூபாய் தருகிறேன் இதனை நீங்கள் குடியுங்கள் என தெரிவித்திருக்கிறார்கள்.
முறையான பதில் ஏதும் வராத நிலையில், அகமதாபாத் நகராட்சி ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சம்மந்தபட்ட மெக்டொனல்டு-க்கு வந்த அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு ஆய்வு செய்து அந்த உணவு விடுதிக்கு சீல் வைத்தனர்.
அனுமதியின்றி கடையை திறக்கக் கூடாது என்றும் நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். இதனிடையே மெக்டொனல்டிஸில் இருந்தபடியே பார்கவ் உள்ளிட்டோர் பல்லி விழுந்த பானத்தோடு வீடியோ எடுத்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டது பெருமளவில் வைரலாகி பேசுபொருளானது.
இதனையடுத்து மெக்டொனல்ட்ஸை புறக்கணிக்க வேண்டும் என எதிர்ப்புக்குரல் ட்விட்டரில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.