பெட்ரோல், டீசல் மீதான உயர்த்தப்பட்ட கலால் வரியில் இருந்து சொற்ப அளவிலான வரியை மட்டும் ஒன்றிய பாஜக அரசு குறைத்திருக்கிறது. அந்த குறைக்கப்பட்ட வரியிலும் மாநில அரசின் பங்கு இருந்துள்ளது.
ஆகவே வரியை குறைத்த போதும் பெட்ரோல், டீசல் மீதான விலையில் பெரியளவில் எந்த மாற்றமும் ஏற்படாமல் தற்போது 100 ரூபாய்க்கு மேல்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பெருமளவில் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள தமிழ்நாடு மனிதவள மேம்பாடு மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
அதில், “இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தனிநபர் வருமானம் 2 மடங்கு அதிகரித்திருக்கிறது. வருவாய் பற்றாக்குறை ரூ.60,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக குறைத்திருக்கிறோம்.
தேசிய அளவில் 8% ஆக இருக்கும் பணவீக்கம், தமிழ்நாட்டில் 5 சதவிகிதம்தான் உள்ளது. நாங்கள் என்ன செய்யவேண்டும் என எங்களுக்கு தெரியும். எங்களைவிட மோசமாக செயல்படுவோரின் அறிவுரைகள் எங்களுக்கு தேவையில்லை.
அரசியலமைப்புகளுக்கு அப்பாற்பட்டவர்களை நாங்கள் விரும்புவதில்லை. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் வரியை உயர்த்துவதும், மாநில அரசுகளின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக செயல்படுவதும் தொடர்ந்து வருகிறது” இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.