ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை இரண்டு மாதங்களில் பத்து ரூபாயுக்கும் மேல் உயர்த்திவிட்டு தற்போது விலையை குறைப்பதாக அறிவித்திருப்பது கொள்ளையடிப்பதற்குச் சமமானது எனவும் உண்மையில் பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரியை குறைப்பதே உண்மையான விலைக் குறைப்பாகும் என ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு நேற்று முன் தினம் கலால் வரியை குறைத்தது. இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம் குறைக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்ட கியாஸ் சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு தொடர்பாக முன்னாள் ஒன்றிய நிதிஅமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 என விலை குறைப்பது கொள்ளை அடிப்பதற்கு சமமானது. மாநிலங்களுக்கு ஒன்றிய நிதி அமைச்சர் வழங்கியுள்ள உபதேசம் அர்த்தமற்றது. ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கலால் வரி குறைத்தால் அதில் 41 காசுகள் மாநிலங்களுக்கு சொந்தமானது. ஒன்றிய அரசு ஒரு ரூபாய்க்கு 59 காசுகளையும், மாநில அரசு 41 காசுகளையும் குறைப்பதாகவே அர்த்தம். ஒன்றியஅரசு பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரியை குறைப்பதே உண்மையான விலை குறைப்பாகும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதேபோல, விலையை மூன்று மடங்கு உயர்த்திவிட்டு 2 மடங்கு குறைப்பதாக அறிவித்துள்ளதது. இது மக்களை ஏமாற்றும் செயல். இதனால் பொதுமக்களுக்கு எந்த பலனும் இல்லை. இந்த விலை குறைப்புக்குப் பிறகும் மார்ச் மாதம் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என டெல்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லப் தெரிவித்துள்ளார். மேலும், நிதி அமைச்சர் மாயாஜால அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.