நொய்டாவைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிநாராயண் - பூனம். இவர்களது 6 வயது மகளை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. உடனே அவரது பெற்றோர் மகளை மீட்டு அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு அங்கிருந்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி மகளை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, மூளையில் துப்பாக்கியின் குண்டு பாய்ந்ததால் சிறுமி மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியின் உடலை உறுப்பு தானம் செய்தால் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என உறுப்பு தானத்தின் அவசியம் குறித்துப் பெற்றோருக்கு மருத்துவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் தங்களது அன்பு மகளின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்துள்ளனர். பின்னர் உடனே மருத்துவர்கள் சிறுமியின் கல்லீரல், சிறுநீரகம், கண்கள், இதயம் ஆகியவற்றை ஐந்து பேருக்கு போருந்தி, அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர், "மருத்துவர்கள் உறுப்பு தானம் குறித்து எங்களுக்கு ஆலோசனை வழங்கினர், மேலும் எங்கள் குழந்தையால் மற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதால், நாங்கள் அதைப் பற்றி யோசித்து, மற்றவர்களின் வாழ்க்கையில் அவள் உயிருடன் இருப்பாள் என்றும் மற்றவர்கள் புன்னகைக்க ஒரு காரணத்தைக் கொடுப்பாள் என்பதால் நாங்கள் உறுப்பு தானம் கொடுக்க சம்மதித்தோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.