புதுச்சேரி நகர பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், இடையார்பாளையத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் கடந்த 11-ம் தேதி வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலிஸார் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை அதே நிறுவனத்தில் பணியாற்றும் லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் வாஞ்சிநாதன் வீதியைச் சேர்ந்த கணேஷ் (26) என்பவர் கடந்த 9 மாதங்களாக காதலித்து வந்ததும், சில தினங்களுக்கு முன்பு விடுதிக்கு அழைத்துச் சென்று, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
மேலும் இவை அனைத்தையும் மறைத்து, கணேஷ் கடந்த 15-ம் தேதி கடலூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த வேறு பெண்ணை திருமணம் செய்ததும், இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல் அப்பெண் தற்கொலைக்கு முயன்றதும் அம்பலமானது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலத்தை பெற்ற போலிஸார் தற்கொலை முயற்சி வழக்கினை நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, புதுமாப்பிள்ளை கணேஷை வீட்டின் அருகே போலிசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோன்று 5க்கும் மேற்பட்ட இளம்பெண்களை கணேஷ் காதலித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பிறகு கணேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.