புதுச்சேரியில் உள்ள ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இனி ஆட்சி மொழியாக இந்தி இருக்கும் என்ற அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஜிப்மரின் இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் 1000க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் ஜிப்மரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ஜிப்மரில் இந்தி கட்டாயமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படவில்லை என ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுடளான மொழி பரிமாற்றங்கள் அனைத்தும் உள்ளூர் (தமிழ்) மொழியிலே இருக்கும் என்றும், அதற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி ஜிப்மரில் அலுவல் பணிகளுக்கு அலுவல் மொழிகள் பயன்படுத்துவது தொடர்பாக ஜிப்மரின் கொள்கையில் எந்தவித புதிய மாற்றமும் இல்லை எனவும், அலுவல்மொழிக் கொள்கையின்படி பெயர் பலகைகள் மற்றும் அடையாளப்பலகைகள் ஒன்றிய அரசாங்கத்தினால் பொதுமக்களிம் தகவலுக்காக உள்ளூர் மொழியில் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.