ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி விமான நிலையத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது மகனுடன் பெற்றோர் ஒருவர் வந்துள்ளனர். இவர்கள் விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்வதற்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, சிறுவனின் நடவடிக்கையை கண்ட இண்டிகோ நிறுவன ஊழியர்கள், “அச்சிறுவனின் பெற்றோரிடம் வந்து உங்கள் மகனை விமானத்தில் ஏற்றமாட்டோம். அவரை அழைத்துச் சென்றால் மற்ற பயணிகள் பாதிக்கப்படுவார்கள்” என கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இண்டிகோ நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த சக பயணிகள் சிறுவனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். மேலும் 'அச்சிறுவன் தங்களுடன் விமானத்தில் பயணம் செய்ய எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை' என கூறியுள்ளனர்.
ஆனால், இண்டிகோ நிறுவன ஊழியர்கள் யார் பேச்சையும் கேட்காமல் பிடிவாதத்துடன் இருந்துள்ளனர். பிறகு அடுத்தநாள் அவர்கள் செல்லும் ஊருக்குச் சிறுவனையும், அவரது பெற்றோரையும் வேறு விமானத்தில் அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சக பயணி மனீஷா குப்தா என்பவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு இண்டிகோ நிறுவனத்தின் இத்தகைய செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவரது சமூகவலைதள பதிவில், "நாங்கள் மாற்றுத்திறனாளி சிறுவனுடன் பயணிக்க எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியும், இண்டிகோ நிறுவனத்தின் மேலாளர் கேட்காமல் தொடர்ந்து சத்தம்போட்டுக் கொண்டே இருந்தார்.
விமான பயணிகளிடம் எவ்விதமான பாரபட்சமும் காட்டக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புகளை நாங்கள் சுட்டிக் காட்டியும் இதை இண்டிகோ நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது. இந்த சம்பவத்தின்போது, சிறுவனின் பெற்றோர் ஒருமுறை கூட மரியாதை குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்த வில்லை" என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதிவையொட்டி,பலரும் இண்டிகோ நிறுவனத்தின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் கொடுத்த விளக்கத்தில், “பயணிகளின் பாதுகாப்பைக் கருதியே நாங்கள் மாற்றுத்திறனாளி சிறுவனையும் அவரது பெற்றோரையும் அனுமதிக்கவில்லை. பிறகு அவர்களை விடுதியில் தங்கவைத்து, அடுத்த நாள் அவர்களை வேறு விமானத்தில் அவர்கள் செல்லும் இடத்திற்கு அனுப்பிவைத்தோம்" என தெரிவித்துள்ளது. இதையடுத்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.