வேறொரு நபரை காதலி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டததால் ஆத்திரமடைந்த காதலன் செய்த செயலலால் பரிதாபமாக 7 உயிர்கள் பலியான சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த ஷுபம் என்கிற சஞ்சய் தீக்ஷித் (27) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தீக்ஷித்துக்கும் மத்திய பிரதேசத்தின் இந்தூரின் விஜயநகர் பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் இருந்து வந்திருக்கிறது.
அப்பெண் திடீரென வீட்டில் பார்த்த நபரை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் தீச்ஷித் தான் செலவு செய்த பணத்தை அப்பெண்ணிடம் திரும்ப கேட்டிருக்கிறார்.
அதனை கொடுக்க முடியாது என பெண்ணின், அவரது தாயாரும் மறுத்ததால் தீக்ஷித் ஆத்திரமடைந்திருக்கிறார். இதனால் பெண் வசிக்கும் 3 மாடி கட்டமான குடியிருப்புக்குள் புகுந்து காதலியின் இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியிருக்கிறார்.
அந்த தீ மளமளவென பரவி பெரும் தீ விபத்தாக ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்த குடியிருப்பில் இருந்த 7 அப்பாவிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமுற்றனர். ஆனால் பெண்ணும், பெண்ணின் தாயாரும் முன்னரே வீட்டில் இருந்து தப்பித்திருக்கிறார்கள்.
இந்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்ததில் மேற்குறிப்பிட்ட விவகாரம் வெளியே வந்திருக்கிறது.
இதனையடுத்து வேண்டுமென்றே தீ விபத்தை ஏற்படுத்திய தீக்ஷித்தை பிடிக்க போலிஸார் வலை வீசியிருக்கிறார்கள். அதன்படி தீக்ஷித்தை இன்று (மே 8) அதிகாலையளவில் மடக்கிபிடித்து கைது செய்திருக்கிறார்கள்.
போலிஸாரிடம் இருந்து தப்பியோட முயன்ற போது தீக்ஷித்திற்கு காயமுற்றதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காதலிக்கு செலவழித்த 10,000 ரூபாயை திரும்ப கேட்டும் அதை தராததாலேயே இப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.