பாஜகவின் இந்தி சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கைக்கு இடையே நீதிமன்றத்தில் மாநில மொழிகள் அவசியம் என கூறி பிரதமர் மோடி இரட்டைவேட கபடநாடகமாடுவதாக சிபி(ஐ)எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாடியுள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் செங்கொடியை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மோடி ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணத்தை வாரி வழங்கி கொண்டிருக்கிறது. மேலும் பல சலுகைகளையும் வழங்கி கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறார்கள். தனியாருக்கு இந்தியாவின் பொதுத்துறையை அடிமாட்டு விலைக்கு விற்று வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மக்கள் மத்தியில் மதவெறியை தூண்டி விடுகிறார்கள். சிறுபான்மை மக்கள் மீது மிக பெரிய தாக்குதலை நடத்தி வருகிறார்கள். மத ஒற்றுமையை சீரழிக்கும் மோடி அரசை விரட்ட வேண்டும் என சூளுரைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
அகில இந்திய போட்டி தேர்வுகளை அந்தந்த மாநிலங்களில் எழுத வேண்டுமே தவிர பிற மாநிலங்களில் சென்று எழுத கூடாது. அப்படி சென்றால் மாணவர்களுக்கு மன அழுத்தங்கள் தான் ஏற்படும் என கூறிய பாலகிருஷ்ணன், நீதிமன்றத்தில் மாநில மொழிகளில் வழக்குகள் வாதாட வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்துகிறார். ஆனால் மறைமுகமாக இந்தி சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு இரட்டைவேடம் போட்டு கபடநாடகமாடுகிறார் என சாடினார்.
மேலும், நீதிமன்றங்களில் மாநில மொழி பயன்பாடு என்பது நீண்ட காலமாக அனைத்துக் கட்சிகளும் கூறிய கோரிக்கை இன்று தற்போது தான் பிரதமருக்கு உரைத்து இருக்கிறது. அதனை வார்த்தையாக கூறினால் மட்டும் போதாது நிறைவேற்றி தர வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.