பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தின் போது கூறியிருந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், நாட்டு மக்கள் அனைவருக்குமே தெரியும் கடந்த எட்டு ஆண்டுகளில் அதாவது பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய அரசில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான விலை விண்ணை தொட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் பிரதமர் மோடி உதித்திருக்கும் இந்த பேச்சு பெரும் கொந்தளிப்பையே உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், சந்திர சேகர ராவ், உத்தவ் தாக்ரே என பலரும் பெட்ரோல், டீசல் மீதான ஒன்றிய அரசின் கலால் வரி உயர்வு குறித்தும், மாநில அரசுகள் குறைத்த வரி குறித்தும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 200 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரியை 500 சதவிகிதமும் உயர்த்தியுள்ளது. அதாவது 2014ம் ஆண்டு பெட்ரோல் மீது ரூ.9.48 ஆகவும், டீசல் மீது ரூ.3.57 ஆகவும் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.27.90ம், ரூ.21.80ம் முறையே வசூலிக்கப்படுகிறது.
அதே போல தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி 50 சதவிகிதம் மட்டுமே இந்த எட்டு ஆண்டுகளில் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆகவே பெட்ரோல், டீசல் மீதான வரியால் அதிகபடியாக வருவாயை ஈட்டுவது ஒன்றிய அரசு மட்டும்தான் என்பது தெளிவுபட தெரிந்துள்ளது.
இப்படியாக கலால் வரியை வானளவுக்கு உயர்த்திவிட்டு மாநிலங்கள்தான் வரியை குறைக்க வேண்டும் என பிரதமர் பேசியிருக்கிறார். இதனால் அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.