ஏ.டி.எம் மையங்களில் நடைபெறும் திருட்டு சம்பவங்கள் பெரும்பாலும் விநோதமானதாகவே இருக்கும். சினிமா படங்களை பார்த்து அதில் வருவது போன்று திருடுவதாக எண்ணி போலிஸாரின் வலையில் திருடர்கள் சிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த விசித்திரமான ஏ.டி.எம் கொள்ளை போலிஸாரையே அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.
அதன்படி, கடந்த சனிக்கிழமையன்று (ஏப்.,23) மகாராஷ்டிராவில் உள்ள சங்க்லீ பகுதியில் உள்ள தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது.
அப்போது கொள்ளையர்கள் ஏ.டி.எம் மிஷினில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதற்காக மையத்தில் இருந்த ஏ.டி.எம். மிஷினையே புல்டோசர் வாகனத்தை கொண்டு பெயர்த்து மர்ம நபர்கள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
இவை அனைத்து ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் முதற்கட்டமாக ஏ.டி.எம் மிஷினை கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட புல்டோசர் வாகனமும் பெட்ரோல் நிலையத்தில் இருந்து திருடப்பட்டது என தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக பேசியுள்ள மிராஜ் க்ராமின் காவல் நிலைய ஆய்வாளர் சந்த்ரகாந்த் பெத்ரே, கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம். மிஷினில் 27 லட்சம் ரூபாய் உள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை சமயத்தில் நடைபெற்றிருக்கிறது.” எனக் கூறியுள்ளார். தற்போது இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.