உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை தொடர்ந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கின்றனர். இதனால் பிரபலமான நிறுவனங்களும் மின்சார பைக், கார்களை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மின்சார ஸ்கூட்டர்கள் வெடித்து விபத்துகளை எற்படுத்தி வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. தமிழகத்தில் கூட வேலூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகள் என இருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானா மாநிலத்தில் வீட்டினுள் நிறுத்தி சார்ஜ் ஏற்றப்பட்ட மின்சார ஸ்கூட்டர் திடீரென வெடித்து சிதறியதில், 80 வயது முதியவர் உயிரிழந்தார். இப்படி மின்சார ஸ்கூட்டர்கள் வெடித்து விபத்துகளை ஏற்படுத்து வரும் நிலையில் மீண்டும் ஆந்திராவில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கடந்த வெள்ளியன்று மின்சார ஸ்கூட்டர் ஒன்று வாங்கியுள்ளார். இதையடுத்து நேற்று இரவு வாகனத்திற்கான பேட்டரியை தனது படுக்கையறையில் வைத்து சார்ஜ் செய்துள்ளார்.
இதையடுத்து இன்று அதிகாலை குடும்பத்துடன் அவர் தூக்கிக் கொண்டிருந்தபோது திடீரென சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி வெடித்து வீடு முழுவதும் தீ பற்றியுள்ளது. இந்த விபத்தில் சிவக்குமார் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தீ காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து மின்சார ஸ்கூட்டர்களின் பேட்டரிகள் வெடித்து விபத்துகளை ஏற்படுத்தி வருவதால் இந்த வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் விரைந்து இதற்கு ஒரு தீர்வைகாண வேண்டும் என்றும், உயிரோடு விளையாட வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.