பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று குஜராத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் செய்தபோது, வழக்கம்போல் சாலையின் இருபுறமும் வெள்ளைத் துணிகளைக் கொண்டு குடிசைப்பகுதிகளை மறைத்துள்ளது பா.ஜ.க அரசு.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில் இதுதான் உங்கள் ‘குஜராத் மாடல்’ வளர்ச்சியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது எழுந்துள்ள அரசியல் பிரச்சனை தெரியாமல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் JCB எந்திரத்தின் மீது ஏறி போஸ் கொடுத்து நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.
டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த இஸ்லாமிய வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போலிஸார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன இதை மெய்ப்பிக்கும் வகையிலேயே, டெல்லி நகராட்சி நிர்வாகம் வன்முறை ஏற்பட்ட பகுதியில் உள்ள இஸ்லாமிய வீடுகள் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளது என கூறி புல்டோசரை கொண்டு இடித்துத் தள்ளியது.
பிறகு இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு கட்டட இடிபாடுகளை உடனே நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இஸ்லாமிய மக்களுக்கு எதிராக புல்டோசர் ஆயுதத்தை பா.ஜ.க அரசு கையில் எடுத்துள்ளது என அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில்தான் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் புல்டோசர் எந்திரத்தில் ஏறி போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.