பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒவ்வொரு நாளும் தங்களது வாழ்வை கடத்துவதே பெரும் போராட்டமாக இருந்து வருகிறது.
சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி வற்புறுத்துவதும், தாக்குவதும், தலித் பிரிவினரை கண்டால் வேண்டுமென்றே தாக்குவதும் போன்ற அவலங்கள் தொடர்ந்து இந்துத்வ கும்பலால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ரேபரேலி பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் தலித் பிரிவைச் சேர்ந்த மாணவனை ஏழு பேர் கொண்ட மாணவர்கள் கும்பல் தங்களது கால்களை நக்கச் சொல்லியிருக்கிறார்கள். மேலும் அந்த சிறுவனை கும்பல் தாக்கவும் செய்திருக்கிறது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பெருமளவில் வைரலான நிலையில் தலித் சிறுவனை கொடுமைப்படுத்திய கும்பலை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிந்த போலிஸார் அவர்களை கைதும் செய்திருக்கிறார்கள்.
அதில் ஒருவர் மைனர் என்பதால் அந்த சிறுவனை மட்டும் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பிய போலிஸார் எஞ்சிய ஆறு பேரான அபிஷேக், விகாஷ் பாசி, மகேந்திரகுமார், ஹிருத்திக் சிங், அமன் சிங், யாஷ் பிரதாப் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என ரேபரேலி எஸ்.ஐ. ஷ்லோக் குமார் கூறியுள்ளார்.