ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா. இளம்பெண்ணான இவர் IT நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தே சுமலதா வேலைசெய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தனது மடிக்கணினியில் அலுவலகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது மடிக்கணினி வெடித்து தீப்பிடித்துள்ளது. மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் தீக்காயத்துடன் இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக IT ஊழியர்கள் பலரும் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இதனால் தங்களது மடிக்கணினியை எந்நேரமும் சார்ஜ் செய்தபடியே வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில், IT ஊழியர் ஒருவரின் மடிக்கணினி வெடித்துள்ளது அனைவரையும் பீதியடைய வைத்துள்ளது.