ஒன்றிய பாஜக அரசின் இயலாமை காரணாமாக கொரோனா வைரஸால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளதை அவர்கள் மறைத்துள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
உலகில் கொரொனா மூலம் உயிரிழந்தவர்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழந்தவர்களின் உண்மையான கணக்கை உலக சுகாதார நிறுவனம் வெளியிட ஒன்றிய பாஜக அரசு தடையாக இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பிரதமர் மோடி உண்மையை சொல்லவும் மாட்டார். மற்றவர்கள் அதனை சொல்ல அனுமதிக்கவும் மாட்டார்” என்று ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆக்சிஜன் கிடைக்காமால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மோடி தற்போதும் பொய்சொல்லி வருகிறார். எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 5 லட்சம் பேர் அல்ல. 40 லட்சம் பேர் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக உலக சுகாதார நிறுவனம் தரவின் படி கொரோனா காரணமாக உலகளவில் 90 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது நியூயார்க் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டுள்ளதோடு கணக்கிட்டால் அந்த 90 லட்சம் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்களாக இருப்பர்.
இது பிற நாடுகளை கணக்கிடுகையில் மிகப்பெரிய அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கையையே சுட்டிக்காட்டுகிறது எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.