இந்தியா

”நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” - பினராயி விஜயன் புகழாரம்!

இந்தி திணிப்பு என்பது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சி. இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

”நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” - பினராயி விஜயன் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு இன்று (ஏப்ரல் 09) நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இதற்காக கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு மாநில அமைச்சர் கோவிந்தன், சி.பி.ஐ.எம். நிர்வாகிகள் என பலரும் நேரில் வந்து வரவேற்றனர்.

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுதிக்கு சென்ற போது அங்கு அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேரில் சந்தித்து உரையாற்றினார்.

மாலை தொடங்கிய மாநாட்டுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பலரும் அமோக வரவேற்பை அளித்தனர்.

இதனையடுத்து மேடையில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து புகழ்பாடினார்.

மேலும், “ஒரு நாடு ஒரே மொழி, புதிய கல்விக் கொள்கையில் இந்தி என்று கூறிய போது நாடுமுழுதும் கடும் எதிர்ப்பு நிலவியது. அதன் தொடர்ச்சியாகத்தான் மாநில மொழிகளை சிதைக்கும் முயற்சி நடக்கிறது. இந்தி திணிப்பு என்பது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சிதைக்கும் முயற்சி. இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

நாடாளுமன்றம் நடைமுறை மீது சங்பரிவாருக்கு நம்பிக்கை இல்லை. நாட்டை அதிபர் ஆட்சிக்கு மாற்ற முயற்சிக்கிறார்கள். அதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார்கள்.

ஜி.எஸ்.டி விகிதத்தை தரமறுத்தபோது அனைத்து மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தை நாடப்போகப்போவதாக எச்சரித்த போதுதான் ஜி.எஸ் டி நிலுவை தொகையை ஒன்றிய அரசு விடுவித்தது.

மாநில அரசுகளுக்கு தொடர்பில்லாத செஸ் மற்றும் சர்சார்ஜ் வரியை 15% ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் முழு வரியும் ஒன்றிய அரசுக்குத்தான் செல்கிறது. கூட்டாட்சியை சிதைக்கும் அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டுவருகிறது.

கூட்டாட்சியை பலப்படுத்துவதும், மாநில அதிகாரத்தை வலுப்படுத்துவதும் இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. அதற்கு அடித்தளமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்ளும் இந்த மாநாடு அமைந்துள்ளது” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உரையாற்றியுள்ளார்.

banner

Related Stories

Related Stories