தேர்வு சமயத்தின் போது நண்பர்கள் உதவியுடன் பார்த்தும், பேப்பரில் எழுதி எடுத்துச் சென்று எழுதிய காலம் போய், தொழில்நுட்பங்கள் வளர வளர அதற்கேற்றார் போல் ப்ளூடூத்தில் பேசுவது, செல்ஃபோனை மறைத்து எடுத்துச் செல்வது என பல வகைகளை மாணவர்கள் கையாண்டு வருகின்றனர்.
இது போன்ற செயல்களை தடுப்பதற்காக நாடு முழுவதும் கல்வித்துறை சார்பில் தேர்வுகளின் போது பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு காப்பி அடித்து பார்த்து எழுதும் மாணவர்களை பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வின் போது பறக்கும் படையினரிடம் 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் சிக்கியிருக்கிறான்.
அதன்படி, ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. தேர்வு அறையில் பரிட்சை அட்டையில் மொபைல் போனை ஒளித்து வைத்தபடி தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவனை பறக்கும்படையினர் பிடித்திருக்கிறார்கள்.
அப்போது மாணவனின் தேர்வு அட்டையை சோதித்ததில் அதில் 11 பக்கங்கள் கொண்ட ஆங்கில புத்தத்தை வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் பொறுமையாக பார்த்து பிடிபட்ட மாணவர் தேர்வு எழுதியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த மாணவன் மீது கல்வித்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோவை தீபெந்தர் தேஸ்வால் என்ற தி ட்ரிபன் பத்திரிகையாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.