தலைக்குள் வைத்து தங்கத்தை கடத்திவந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
ஷார்ஜாவில் இருந்து உத்தர பிரதேச தலைநகர் லக்னோ விமான நிலையத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்பட்டதால் அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
தலையில் பாதி அளவுக்கு மொட்டை அடித்த அந்த இளைஞர் அந்த இடத்தில் தங்கத்தை மறைத்து வைத்து அதன் மேல் விக் அணிந்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேசிய விமான நிலைய அதிகாரி ஒருவர், "அந்த இளைஞரின் நடவடிக்கைகள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரை விசாரித்தோம். கேள்வி கேட்டதற்கு அந்த இளைஞர் பதற்றத்துடன் பதில் அளித்தார். அதை தொடர்ந்து அவரது தலைமுடி உண்மையானது அல்ல என்பது தெரியவந்தது.
அவர் அணிந்திருந்த விக்கிற்குள் 291 கிராம் தங்கத்தை பசை வைத்து ஒட்டி கடத்தி வந்துள்ளார். இதன் மதிப்பு 15.42 லட்சம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தலைக்குள் தங்கத்தை மறைத்து கடத்திவந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.