ஒடிசாவில் நகர்ப்பு உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 24ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் மார்ச் 26ம் தேதி வெளிவந்தது. இதில் முதல்வர் நவீன் பட்நாயக் கட்சியான பிஜு ஜனதா தளம் அபார வெற்றி பெற்றுள்ளது.
புவனேஸ்வர், கட்டாக், மற்றும் ஷாம்பூர் மாநகராட்சிகள் உட்பட 109 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் 95 இடங்களில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பா.ஜ.க 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மேலும், 1731 கவுன்சிலர் இடங்களில் பிஜு ஜனதா தளம்1044 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க 259 இடங்களிலும், காங்கிரஸ் 116 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர். மேலும் மாவட்ட கவுன்சில் தலைவர் பதவியை 70% பெண்கள் கைப்பற்றியுள்ளனர்.
அதேபோல் தமிழ்நாட்டைப் போன்று உள்ளாட்சியில் 50% இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னதாக நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் 786 இடங்களில் பிஜூ ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பா.ஜ.க 40 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து முதல்வர் பட்நாயக்,"எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்" என தெரிவித்தார்.