திருமணத்தின் போதோ அல்லது திருமணம் நடக்கும் இல்லங்களிலோ அசம்பாவிதங்கள் நடைபெறுவது தொடர்பான செய்திகள் அண்மை காலமாக அதிகளவில் வெளியாகின்றன.
அந்த வகையில், திருமணம் நடந்த மறுநாளே புது மணமகன் தற்கொலை செய்துக்கொண்ட நிகழ்வு கேரள மாநிலத்தில் நடந்தேறியிருக்கிறது.
திருச்சூர் மாவட்டம் ஒல்லூரில் உள்ள மனக்கொடி பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மகன் தீரஜ் (37). துபாயில் பணியாற்றி வரும் இவருக்கும், மரோட்டிச்சல் பகுதியைச் சேர்ந்த நீது என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிறன்று திருமணம் நடந்திருக்கிறது.
திருமணத்துக்காக துபாயில் இருந்து 10 நாட்கள் விடுமுறையில் வந்த தீரஜ், திருமணமான மறுநாளான திங்களன்று மரோட்டிச்சலில் இருந்து மனக்கொடியில் உள்ள வீடு வரைக்கும் சென்று வருவதாக சொல்லிவிட்டு ஸ்கூட்டரில் கிளம்பியிருக்கிறார்.
வெகுநேரமாகியும் தீரஜ் வீடு திரும்பாதால் பதற்றமடைந்த உறவினர்கள், ஒல்லூரி போலிஸிடம் தீரஜ்ஜை காணவில்லை என புகார் கொடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் தீரஜ் தற்கொலை செய்துக்கொண்ட தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.15 மணியளவில் செதுவா ஏரியில் மீன் பிடிப்பதற்காக மீனவர் ஒருவர் வீசிய வலையில் தீரஜ்ஜின் உடல் சிக்கியிருக்கிறது.
இதனையடுத்து ஏரிக்கரையில் சடலமாக கிடந்த தீரஜ்ஜின் உடலை மீட்ட போலிஸார் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரது மரணம் குறித்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.