“கலால் வரியை 11 முறை உயர்த்தி ரூபாய் 24 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டுவிட்டு, மீண்டும் பெட்ரோல் விலையை ஏற்றுவதா? இதைவிட ஒரு பகற் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.” என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கலால் வரியை 11 முறை உயர்த்தி ரூபாய் 24 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டது. இதைவிட ஒரு பகற் கொள்ளை வேறு எதுவும் இருக்க முடியாது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை நிர்ணயத்தின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.16, ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 92.19, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 967 என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதோடு, அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்து அனைத்து பொருட்களின் விலையும் உயருகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய பா.ஜ.க அரசை பொறுத்தவரை மக்களின் மீது சுமையை ஏற்றுகிற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
கடந்த கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்கள் மீது சுமையை ஏற்றாமல் மானியங்களை வழங்கி பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்த விலைவாசி உயர்வை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.