தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5%ல் இருந்து 8.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2021-2022 ஆண்டிற்கான PF வட்டி குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) தொடர்பான முடிவுகளை எடுக்கும் மத்திய அறங்காவலர் வாரியம் (CBT) தலைமையிலான இன்றைய கூட்டத்தில் பிஎஃப் வட்டி விகிதம் 8.1 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதம் 2021-22 ஆண்டிற்குப் பொருந்தும். முன்னதாக 2021 மார்ச் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 2020-21 நிதியாண்டுக்கான PF வட்டி விகிதம் 8.5 சதவீதமாக வைக்கப்பட்டது. ஆனால், இப்போது அதைவிட குறைவான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வட்டியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018-19ஆம் ஆண்டில் பிஎஃப் விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர் 2019-20ஆம் ஆண்டில் அது 8.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பிஎஃப் வட்டி மேலும் குறைக்கப்பட்டுள்ளது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது கடந்த 1977 - 78ஆம் ஆண்டில் இருந்து பார்க்கும்போது மிக குறைவாகும். அப்போது வட்டி விகிதம் 8% ஆக இருந்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது குறைந்துள்ளது. கடந்த 2010-2011 ஆம் ஆண்டு வரை PF வட்டி விகிதம் 9.50% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.