சிறு துளி பெரு வெள்ளம் என்ற சொற்றொடருக்கு ஏற்ப சிறுக சிறுக நாணயங்களை சேர்த்து வைத்து தன்னுடைய கனவை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் அசாமைச் சேர்ந்த காய்கறி வியாபாரி.
பார்பேட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹஃபிஸர் அக்ஹந்த் (37). காய்கறி வியாபாரம் செய்து வரும் இவருக்கு சொந்தமாக டூ வீலர் வாங்க வேண்டும் என்பதே நீண்ட நாள் ஆசையாக கனவாக இருந்திருக்கிறது.
தனது கனவை நிறைவேற்றுவதற்காக சுமார் 7 முதல் 8 மாதங்களாக சில்லறை காசுகளை சேமித்து வைத்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று பார்பேட்டாவில் உள்ள பிரபல டூ வீலர் ஷோரூமான சுசுகியிடம் இருந்து அவருக்கு பிடித்தமான வண்டியை தேர்வு செய்திருக்கிறார்.
வண்டிக்காக பணமாக தான் கொண்டு வந்த மூட்டையை ஷோரூம் ஊழியர்களுக்கு கைக்காட்டியிருக்கிறார். அப்போது, அந்த ஷோரூம் ஊழியர்களிடம் தன்னுடைய கனவு, ஆசை குறித்து அக்ஹந்த் எடுத்துரைத்திருக்கிறார்.
இதனையடுத்து, மூட்டையில் இருந்த அக்ஹந்தின் சேமிப்பு நாணயங்களை சுமார் 2 முதல் 3 மணிநேரமாக எண்ணியதன் முடிவில் 22 ஆயிரம் ரூபாய் தேரியிருகிறது.
ஆனால் அக்ஹந்த் தேர்ந்தெடுத்த வண்டி ஒரு லட்ச ரூபாயை எட்டும் என்பதால் எஞ்சிய பணத்தை மாதத்தவணையாக மாற்றப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான வீடியோவும் ஃபோட்டோவும் யூடியூபர் ஹிராக் ஜெ தாஸ் என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் நாணயங்களை எண்ணும் பணி, அக்ஹந்த் வண்டியை பெறுவது குறித்த வீடியோவையும் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ஹிராக்.
அதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் அக்ஹந்தின் செயலை எண்ணி நெகிழ்ச்சி அடைந்ததோடு, அவருக்கு ஒத்துழைத்த ஷோரூம் ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.