பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பொய் பிரச்சாரத்தை பத்திரிகையாளர் ஒருவர் உடனடியாக அம்பலப்படுத்தியுள்ளார்.
பா.ஜ.கவினர் பொய்களையே தங்களது பிரச்சார உத்தியாகக் கையாண்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் குஜராத் கட்டுக்கதைகளைப் பயன்படுத்தியே ஆட்சிக்கு வந்தார். அவரைப் பின்பற்றி பா.ஜ.கவினர் பலரும் பொய்க்கதைகளைப் பரப்பி அம்பலப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க அரசின் சாதனைகள் என்றும், யோகி ஆதித்யநாத்தின் சாதனைகள் என்றும் போட்டோஷாப் படங்களையும், பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர் பா.ஜ.கவினர்.
இதுகுறித்து அண்மையில் பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், “பா.ஜ.க பொய்களின் பொதிமூட்டையாக உள்ளது. பா.ஜ.கவின் சிறிய தலைவர்கள் சிறிய பொய்களையும், பெரிய தலைவர்கள பெரிய பொய்களையும், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் மிகப்பெரிய பொய்களையும் கூறி வருகின்றனர்'' என பா.ஜ.கவை விமர்சித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, தான் காரில் பயணிக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, “யோகியின் ஆட்சியில் லக்னோ டு கன்னுஜ் எக்ஸ்பிரஸ்வே” எனக் குறிப்பிட்டு யோகி ஆட்சியில் உருவாக்கப்பட்ட சாலை என்பதைப் போல பதிவிட்டிருந்தார்.
தேஜஸ்வி சூர்யாவின் இந்தப் பொய்யான ட்வீட்டை அம்பலப்படுத்தி பத்திரிகையாளர் ஒருவர் உடனடியாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.
அவரது பதிவில், “இந்த எக்ஸ்பிரஸ்வே அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது 2016 நவம்பர் 23ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராகப் பதவியேற்றதே 2017 மார்ச் 19 அன்றுதான்.” என அம்பலப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் பா.ஜ.க எம்.பியின் போலி விளம்பரத்தை அம்பலப்படுத்தி விமர்சனம் செய்து வருகிறார்கள். மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பதில் பொய் சொல்லியே ஆட்சிக்கு வர விரும்பும் கட்சி பா.ஜ.கவைத் தவிரே வேறு இருக்க முடியாது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.