மும்பையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த ரயில் மோதியதில் இருசக்கர வாகனம் சுக்கு நூறாக உடைந்து, அதன் ஓட்டுநர் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் ரயில்வே கிராசிங்கை கடக்க முயல்கிறார். அப்போது அதிக வேகமாக வந்த ரயிலைப் பார்த்தவுடன் தனது வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயல்கிறார். அந்த நொடியிலேயே இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த ரயில் மோதிவிட்டு நிற்காமல் செல்கிறது. இதில் இருசக்கர வாகனம் சுக்குநூறாக உடைந்து சிதறும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதையடுத்து இது தொடர்பாக போலிஸார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிர் தப்பியவர் ரஞ்சித் தேஷ்பாண்டே என்பது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங் வெடித்திருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்பதால் போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற ரயில்வே கிராசிங்கில் ஏற்படும் விபத்துகளை தடுக்க போலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இளைஞர்கள் தங்களின் உயிரோடு விளையாடக் கூடாது எனவும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.