செல்ஃபி எடுக்கும் மோகத்தால் இளைஞர்கள் பலரும் கோர சம்பவங்களில் சிக்கி உயிரை இழக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகின்றன. இருப்பினும் அவற்றை ஏதும் பாடமாக எடுத்துக்கொள்ளாமல் அசட்டையாக செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில் மேற்கு வங்காளத்தில் ரயில்வே தண்டவாளத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, மெடினிபுர் மாவட்டத்தில் உள்ள ரங்கமதி என்ற பகுதியில் பிரபலமான சுற்றுலா பகுதியாக உள்ளது கங்கஸ்வதி ஆறு. அங்கே ரயில்வே மேம்பாலம் உள்ளது.
கங்கஸ்வதி ஆறை கண்டு ரசிக்க அப்பகுதிக்கு பொதுமக்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அவ்வகையில் நேற்று மூன்று இளைஞர்கள் ஆற்றை பார்க்க வந்ததோடு தண்டவாளத்தில் இருந்தபடி செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
அப்போது ஹவுராவுக்கு செல்லும் ரயில் அவ்வழியே வந்துக்கொண்டிருந்த போது தண்டவாளத்தில் இளைஞர்கள் இருப்பதை அறிந்த ரயில் ஓட்டுநர் ஒலி எழுப்பி எச்சரித்தும் செல்ஃபியில் மூழ்கியதால் மூவர் மீது ரயில் மோதியிருக்கிறது.
இதில், மிதுன் கான் (36) மற்றும் அப்துல் கெயின் (32) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசியுள்ள ரயில்வே அதிகாரி பிஸ்வஜித் பாலா, இப்பகுதிக்குள் வந்து செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்த போது அதனை மதியாது பலரும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். ரயில் ஒலி எழுப்பப்பட்டபோது தண்டவாளத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே இருந்ததாலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.