மஹாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சத்தை அதிகாரிகள் டெபாசிட் செய்த நிலையில், அது பிரதமர் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன பணம் என நினைத்து விவசாயி, ரூ.9 லட்சத்தில் வீடு கட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஞானேஸ்வர் ஓட். விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் ஜன்தன் கணக்கு வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் பணம் டெபாசிட் ஆனது. இதனையறிந்த ஞானேஸ்வர், பிரதமர் மோடி தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக எண்ணியுள்ளார்.
மேலும், தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை எடுத்து புதிதாக வீடு கட்டியுள்ளார். ஆனால் அந்தப் பணம் பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தவறுதலாக ஞானேஸ்வரின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது.
4 மாதங்களாக பணம் வராததை அறிந்த பஞ்சாயத்து நிர்வாகத்தினர் வங்கியில் விசாரித்தபோது நடந்த தவறு தெரியவந்தது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தங்கள் மீது உள்ள தவறை உணர்ந்து கொண்ட அதிகாரிகள், பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி ஞானேஸ்வருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
வங்கிக்கணக்கில் எஞ்சியிருந்த ரூ.6 லட்சத்தை வங்கி எடுத்துக் கொண்டது. வீடு கட்டுவதற்கு செலவிட்ட ரூ. 9 லட்சத்தை எப்படி திருப்பி கட்டுவது என ஞானேஸ்வரும், அவரிடம் இருந்து பணத்தை எப்படி திருப்பி வாங்குவது என அதிகாரிகளும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.