ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர 'சமத்துவ சிலை' திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்துள்ளார்.
ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த விழாவிற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹைதராபாத் நகருக்கு விமானம் மூலம் வந்தார். ஆனால், பிரதமரை வரவேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையம் வரவில்லை.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்ட பிரமுகர்கள் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் மாநில முதல்வர் வரவேற்காமல் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியையும் பா.ஜ.கவையும் வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும் என காட்டமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.