அருணாச்சல பிரதேசம், அப்பர் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு எந்தக் கவலையும் இல்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசம், அப்பர் சியாங் மாவட்டத்தில் லுங்டா ஜோர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மிராம் தாரன். இந்தச் சிறுவனை சீன ராணுவத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவுக்குள் வரும் சாங்போ ஆற்றுப் பகுதியில் வைத்து கடத்திச் சென்றனர்.
இதைப் பார்த்த அந்தச் சிறுவனின் நண்பர் ஜானி யாயிங் இதுகுறித்து ஊர் மக்களுக்குத் தகவல் அளித்தார். ஊர் மக்கள் இந்திய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அந்தச் சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்தச் சிறுவனை விரைவாக மீட்கக் கோரி ஒன்றிய பா.ஜ.க அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “குடியரசு தினத்துக்கு சில நாட்களுக்கு முன், இந்தியாவின் எதிர்காலமாகிய அருணாச்சல பிரதேச சிறுவனை சீன ராணுவம் கடத்தியுள்ளது.
இந்த நேரத்தில் சிறுவன் மிராம் தாரோன் குடும்பத்தாருடன் காங்கிரஸ் துணை நிற்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள் தாரன், தோல்வியை ஏற்கமாட்டோம். பிரதமர் மோடி மவுனம் காப்பது, அவர் இந்தச் செயலைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதுபோல் தெரிகிறது” எனச் சாடியுள்ளார்.
அருணாச்சல பிரதேச மக்களைச் சீன ராணுவம் சிறைபிடிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 சிறுவர்களை சீன ராணுவத்தினர் கடத்திச் சென்று ஒரு வாரத்துக்குப் பின் விடுவித்தனர். அதே ஆண்டு மார்ச் மாதம் 21 வயது இளைஞர்களைக் கடத்திச் சென்ற ராணுவத்தினர், இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டதையடுத்து விடுவித்தனர்.
லடாக்கில் இருந்து அருணாச்சல பிரதேசம் வரை 3400 கி.மீ எல்லையை இந்தியா சீனாவுடன் பகிர்ந்துகொள்கிறது. இதனால் இருநாட்டிற்கும் இடையே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. சீனா இந்திய எல்லைப்பகுதியில் தொடர்ச்சியாகப் பாலம் கட்டுவது, வீடு கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், “நம்முடைய தேசத்தில் சட்டவிரோதமாக சீனா பாலம் கட்டுகிறது. பிரதமர் மோடி மவுனம் காப்பதால், சீன ராணுவத்தின் துணிச்சல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போது, இந்தப் பாலத்தைத் திறந்துவைக்கக் கூட பிரதமர் வரமாட்டார் போல் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.