டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி ஜனவரி 26-ஆம் தேதி அணிவகுப்பு நடைபெறும். இந்த நிகழ்வில் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும், அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகளை வடிவமைத்து அணிவகுப்பில் பங்கேற்கும்.
இந்தாண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கியிருந்தன.
தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலகத் தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகிய தலைவர்களைத் தெரியாது என்றும் மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் ஒன்றிய அரசு தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளில் தென்மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தின் ஊர்திகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் அந்த கடிதத்தில்,"குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும், பிரதமர் அவர்கள் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.