இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தினந்தோறும் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் தொற்று பரவி வருவதால் இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை உச்சத்தை எட்டும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும்.
கொரோனா இரண்டாவது அலையின்போது மருத்துவமனையில் சிகிச்சைகளுக்கு இடநெருக்கடி ஏற்பட்டதுபோல் கொரோனா மூன்றாவது அலையில் இருக்காது. இந்தியாவில் மருத்துவமனைகள் தயாராகவே உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.