இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தினந்தோறும் வேகமாகப் பரவி வருகிறது. அதேபோல், கொரோனாவின் வேறு வகையான ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 37,379 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது.
ஏற்கனவே டெல்லியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கை அமல்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும், தனியார் அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் 50% கொண்டு செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு ஜன.,5 முதல் ஜன.,10 வரை வழங்கப்பட்டிருந்த குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.