2022ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரம் சென்ட் வியாபாரியான பியூஷ் ஜெயினின் வீட்டில் நடத்தப்பட்ட மெகா வருமான வரித்துறை சோதனை.
வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து கான்பூரில் உள்ள அனந்த்புரி வீடு, சொந்த ஊரான கன்னூஜில் உள்ள வீடு, குஜராத், மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகங்கள், குடோன்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக அனந்த்புரி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஒரு அறை முழுவதும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை கோடிக் கணக்கில் பதுக்கி வைத்திருந்ததை கண்டு வருமான வரித்துறையினரே ஆடி போயினர்.
அந்த ரூபாய் நோட்டுகளை எண்ண முடியாமல் சோர்ந்து போன அதிகாரிகள் எஸ்பிஐ வங்கியின் உதவியுடன் பணம் எண்ணும் மெஷினை கொண்டு பியூஷ் ஜெயினின் வீட்டில் இருந்த பணத்தை எண்ணினர். இரவு பகலாக தொடர்ந்த இந்த பணம் எண்ணும் பணியில் சுமார் 250 கோடிக்கும் அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
அவை அனைத்தும் பாதுகாப்பாக பெட்டிகளில் வைக்கப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சோதனையின் போது டெல்லியில் இருந்த பியூஷ் ஜெயினை அவரது மகன்கள் பல முறை தொடர்பு கொண்ட பிறகே அவர் கான்பூர் வந்தார்.
கான்பூர் வந்த பியூஷ் ஜெயினை கைது செய்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி வெளியான தகவல்களால் அதிகாரிகளே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். தனது தந்தையிடமிருந்து சென்ட் மற்றும் உணவு பொருட்களுக்கான ரசாயனங்கள் தயாரிப்பதை கற்றுத் தேர்ந்த பியூஷ் ஜெயின், சொந்தமாக தொழில் தொடங்கியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் நாடு முழுவதும் தனது தொழிலை விரிவுபடுத்தி உலகம் முழுவதும் அவர் தயாரிக்கும் பெர்ஃப்யூமை ஏற்றுமதி செய்து வந்திருக்கிறார். இது போக புகையிலை பொருட்களையும் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அதன் மூலம் ஏகபோகமான வருமானம் பார்த்திருக்கிறார் ஜெயின்.
லாரி மூலம் நாடு முழுவதும் பான் மசாலா, பெர்ஃப்யூமை விநியோகிப்பதற்காக போலியான பில் தயாரித்து ரூ.50,000க்கும் குறைவான பொருட்களே இருப்பதாக குறிப்பிட்டு இ-வே பாஸ் பெறுவதில் மோசடி செய்திருக்கிறார். இதன் மூலம் கோடிக் கணக்கில் ஜிஎஸ்டி செலுத்தாமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அப்படி வரி செலுத்தாமல் வைத்திருந்த பணத்தையே வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறார் எனவும் கூறியுள்ளார்கள். பியூஷ் ஜெயின் குறித்து அவரது சொந்த ஊரான கன்னூஜ் பகுதி மக்களிடம் விசாரித்ததில் ஆச்சர்யமூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
என்னவெனில், கன்னூஜுக்கு எப்போதும் பியூஷ் ஜெயின் பழைய ஸ்கூட்டரிலேயே செல்வாராம். மிகவும் எளிமையாகவே இருப்பது அவரது வழக்கமாம். தொழிலதிபராகவே இருந்தாலும் சாமானியனை போலவே இருப்பார் எனக் கூறியிருக்கிறார்கள். தற்போது அவர் வீட்டில் இருந்துதான் 250 கோடி ரூபாய்க்கு மேல் பணப் புதையல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதை அறிந்து கிராம மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
இதனிடையே பியூஷ் ஜெயினின் வீட்டில் இருந்து 25 கிலோ தங்கமும், 250 கிலோ வெள்ளி, ரூ.6 கோடி மதிப்பில் 600 கிலோ சந்தன எண்ணெய்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் ஜெயினுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கான்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறார். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளன.