ஒன்றிய பா.ஜ.க அரசு 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
மேலும், பல்வேறு மாநிலங்களில் சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தீவிரமாக இருந்தபோதுதான் கொரோனா பரவத் துவங்கியது. இதனால் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 இஸ்லாமியர்கள் உயிரிழந்தது தொடர்பாக இதுவரை போலிஸார் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து கான்பூரைச் சேர்ந்த ஷெரீப்கான் என்பவர், "2019ஆம் ஆண்டு நடைபெற்ற சி.ஏ.ஏ போராட்டத்தில் போலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் என் மகன் குண்டடிபட்டு உயிரிழந்தான்.
இது தொடர்பான எனது புகாரை திரும்பப்பெறும்படி மிரட்டி வருகின்றனர். எனது மகனைப் போன்று மேலும் 21 இஸ்லாமியர்கள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். இதுவரை எந்த போலிஸார் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
சிஏஏ போராட்டம் தொடர்பாக 833 பேர் மீது உத்தரப் பிரதேச போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.