சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலதரப்பினரும் வெளிநாடுகளில் தங்களது சொத்துகளை பதுக்குவதற்கும் வாங்குவதற்கும் உதவியாக இருப்பதுதான் பனாமா நாட்டைச் சேர்ந்த பொன்சேகா நிறுவனத்தின் பணியாக இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் எல்லாம் பனாமா பேப்பர் என்ற பேரில் கடந்த 2016ம் ஆண்டு ஊடகங்கள் வாயிலாக அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதில் லட்சக்கணக்கான பிரபலங்கள் சொத்துகளை பதுக்கியதும் தெரியவந்தது.
இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட், கோலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டின் Big-B என்றழைக்கப்படும் அமிதாப் பச்சன் ஆகியோரது பெயரும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை முன் ஆஜராகுமாறு ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள இந்தியா கேட் அருகே உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ஐஸ்வர்யா ராய்.
அப்போது அவரிடம் வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஐஸ்வர்யா ராய் பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக சில கோப்புகளையும் தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிகிறது.
ஐஸ்வர்யா, அமிதாப் மட்டுமல்லாமல் 300க்கும் மேற்பட்ட இந்திய பிரபலங்களின் பெயர்களின் இந்த வரி ஏய்ப்பு புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.