ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மக்களவை உறுப்பினர் பிரிஜ்பூஷன் சிங் கலந்துகொண்டார்.
அப்போது, விழா மேடையில் பிரிஜ்பூஷன் மல்யுத்த வீரர் ஒருவரின் கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிரிஜ்பூஷனின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மல்யுத்தப் போட்டியில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு வீரர் நானும் கலந்துகொள்ள வேண்டும் என போட்டி நடத்தும் நிர்வாகக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த வீரர் எனக்கு பிரிஜ்பூஷன் சிங் எம்.பி.,யை தெரியும் அவர்தான் தன்னை போட்டியில் பங்கேற்கச் சொன்னார் என்றும் கூறியுள்ளார். இது குறித்து பிரிஜ்பூஷன் சிங் எம்.பியிடம் விழா நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரிஜ்பூஷன் சிங் அந்த வீரரின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
மல்யுத்த வீரரை பா.ஜ.க மக்களவை உறுப்பினர் கன்னத்தில் அறைந்ததற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, இதுதான் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சியா என கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.