இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை பா.ஜ.க அரசு உரிய முறையில் கையாளாததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தது. கொரோனாவை விட மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள் கிடைக்காமல் உயிரிழந்தவர்களே அதிகம்.
மேலும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பாகக் குஜராத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், குஜராத்தில் கொரோனாவால் 3 லட்சம் பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசு மீது பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேற்று ராகுல் காந்தி பேசும் வீடியோ ஒன்றில், “குஜராத் மாடல்தான் சிறந்தது என பா.ஜ.க தொடர்ந்து பேசி வருகிறது.
ஆனால் இந்த மாநிலத்தில் கொரோனாவால் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பா.ஜ.க அரசோ 10 ஆயிரம் பேர் இறந்துள்ளதாகப் பொய் பேசி வருகிறது. இது குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி ரூ. 8500 கோடிக்கு புதிய விமானம் வாங்குவார். ஆனால் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கும் வரை பா.ஜ.க அரசுக்குக் காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.