வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும், போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு வீடுகளுக்குச் செல்லுங்கள் என்ற பிரதமரின் தொலைக்காட்சி அறிவிப்பை விவசாயிகள் ஏற்கவில்லை. நாடாளுமன்றம் மூலம் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் இயற்ற வேண்டும், அதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போராட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று ஒருங்கிணைந்த விவசாய சங்கங்கள் தொடர் ஆலோசனை நடத்துகிறார்கள். இதனிடையே, சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான ஆயத்தப்பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது.
அதன்படி முதல் 2 சட்டங்கள் விவசாயத் துறையின் கீழும், மூன்றாவது சட்டம் நுகர்வோர் அமைச்சகத்தின் கீழும் வருகிறது. சட்ட அமைச்சகத்துடன் இணைந்து இந்த அமைச்சகங்கள் சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான வரைவு மசோதாக்களை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளன. அவை தயாரானதும் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
ஒன்றிய அரசிடம் சட்டங்களைத் திரும்பப்பெற இரண்டு நடைமுறைகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்து சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும். அல்லது அவசர சட்டமாக கொண்டு வந்து திரும்பப்பெற வேண்டும்.
அப்படி அவசர சட்டங்கள் வடிவில் திரும்பப் பெற்றால் 6 மாதத்தில் நாடாளுமன்றம் மூலமாக திரும்பப்பெறும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். இது தொடர்பான ஆலோசனைகளில் அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விவசாயிகளின்
மற்றொரு முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து குழு அமைத்து பரிந்துரைகள் பெறுவது குறித்தும் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.