மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரத்தைச் சேர்ந்தவர் ஆஷிஷ். இவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் கிளை ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஷார்ட்ஸ் அணிந்திருந்துள்ளார். இதனால் வங்கியில் பணியாற்றிய ஊழியர்களை அவரை, வீட்டிற்குச் சென்று முழு பேன்ட் அணிந்த பிறகு வங்கிக்கு வருமாறு கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆஷிஷ் வங்கியிலிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆஷிஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் அந்த ட்விட்டரில், "இன்று உங்கள் கிளை ஒன்றில் ஷார்ட்ஸ் அணிந்து சென்றிருந்தேன். அப்போது வங்கியில் இருந்தவர்கள் முழு பேன்ட் அணிந்து வர வேண்டும் என கூறினர்.
ஒரு வாடிக்கையாளர் என்ன அணிய வேண்டும், அணியக்கூடாது என்பது குறித்து ஏதேனும் அதிகாரப்பூர்வ கொள்ளை உள்ளதா? 2017ம் ஆண்டு புனேவில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது. பெர்முடா ஷார்ட்ஸ் அணிந்து வந்தவரை வங்கிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது” என பதிவிட்டு எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு டேக் செய்திருந்தார்.
ஆஷிஷின் இந்த ட்விட்டர் பதிவை சில நிமிடத்திலேயே 2700பேர் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் இவரது ட்விட்டரை ஷேர் செய்து எஸ்.பி.ஐ வங்கியின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து எஸ்.பி.எஸ் வங்கி இதற்கு பதிலளித்துள்ளது. இது குறித்து எஸ்.பி.எஸ் வங்கியின் ட்விட்டரில், "உங்கள் கவலையை நாங்கள் புரிந்துகொள்ள முடிகிறது. எங்களின் வாடிக்கையாளர்களுக்கு என்று எந்த விதமான ஆடைக் குறியீடும் இல்லை. தங்களின் விருப்பப்படியான ஆடைகளை அணியலாம். இந்த சம்பவம் எந்த கிளையில் நடந்தது என்பதைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.