வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா கடலோரம் நிலை கொண்டது. இதனால் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான ஆடு,மாடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கனமழை காரணமாக 4 மாவட்ட துணை ஆணையர்களுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்க வேண்டும் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.