இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, மாட்டுச் சாணம், கோமியம் குறித்த பிரச்சாரங்கள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. மாட்டுச் சாணம் மற்றும் கோமியம் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என எந்த அடிப்படைச் சான்றும் இல்லாத நிலையில் பா.ஜ.க அமைச்சர்கள், எம்.பிக்கள் பலரும் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மாட்டுச் சாணத்தை சாப்பிட்டு, கோமியத்தை குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைலராகி வருகிறது.
ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் மனோஜ் மிட்டல். இவர் அந்த வீடியோவில் தரையில் இருந்த மாட்டு சாணத்தை எடுத்து ருசித்து சாப்பிடுகிறார். அதன் பின்பு மாட்டு கோமியத்தை குடித்தால் என்னென்ன வியாதிகள் தீரும் எனப் பட்டியலிடுகிறார்.
மேலும், பெண்கள் சுகப் பிரசவம் பெற மாட்டு சாணத்தையும் கோமியத்தையும் குடிக்க வேண்டும் என்றும், அப்படி அவர்கள் செய்தால் கட்டாயம் அவர்கள் சிசேரியன் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், மாட்டு சாணத்தை சாப்பிட்டால் நம் உடல், மனம், ஆன்மா அனைத்தும் சுத்தமாகும் என்றும் கூறுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை ஒரு மருத்துவரே பகிரங்கமாக பிரச்சாரம் செய்வது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் உடனடியாக இவருக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ லைசென்ஸை ரத்து செய்யவேண்டும். இவர் இனி எங்குமே மருத்துவம் பார்க்க முடியாதபடி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.