மத்திய பிரதேச மாநிலம் பிண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால் ஜாதவ். விவசாயியான இவர் தனது வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். சில நாட்களாக எருமை மாடு பால் கறக்க யாரையும் அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து கிராமத்தில் இருப்பவர்களிடம் பாபுலால் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மாட்டுக்கு யாராவது பில்லி சூனியம் வைத்திருப்பார்கள் எனக் கூறியுள்ளனர். இதையும் பாபுலால் நம்பியுள்ளார்.
இருப்பினும் பால் கறக்க முயன்றும் எருமை பாடு பால் கறக்க பாபுலாலை அனுமதிக்கவில்லை. இதனால் விவசாயி பாபுலால், பால் கறக்க எருமை மாடு அனுமதிக்க மறுக்கிறது எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதைக் கேட்ட போலிஸார் அவரிடம் கால்நடை மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினர். ஆனால் சில மணி நேரத்திலேயே எருமை மாட்டை காவல்நிலையம் அழைத்துக் கொண்டு வந்து மீண்டும் புகார் கொடுத்துள்ளார்.
அப்போது போலிஸார் விவசாயியிடம், மாட்டிற்கு ஏதாவது உடல்நலப் பிரச்சனை இருக்கும் எனவே கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறி அவரை காவல்நிலையத்தில் இருந்து அனுப்பிவைத்தனர். பின்னர் பாபுலால் காவல்நிலையம் வந்து சென்ற நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது போலிஸாரிடம், மாடு பால் கறக்க அனுமதி கொடுத்துவிட்டதாகக் கூறி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இந்த வினோத சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.