மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கமலா நேரு அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் 40 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய 36 குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர். ஆனால் 4 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன.
பிறகு 13 தீயணைப்பு வாகனங்கள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை பெரும் போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை அறிந்த அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு இரங்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் நிதி அறிவித்துள்ளார். தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.