இந்தியாவின் தேசிய மொழி இந்தி எனக் குறிப்பிட்டு மொழி திணிப்பில் ஈடுபட்டதாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமேட்டோ அண்மையில் சர்ச்சையில் சிக்கியது. கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து மொழித் திணிப்பு முயற்சியில் ஈடுபட்ட ஊழியரை பணி நீக்கம் செய்து, சேவை மைய தொடர்புக்கு தமிழ் மொழியையும் சேர்த்தது.
இந்த விவகாரம் தொடர்பான விவாதம் அடங்குவதற்குள் கர்நாடகாவில் கே.எஃப்.சி மொழித் திணிப்பில் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது.
கர்நாடகாவில் உள்ள கே.எஃப்.சி உணவகத்தில் இந்தி பாடல்களுக்கு பதில் கன்னட பாடல்களை ஒலிபரப்பச் சொல்லி பெண் வாடிக்கையாளர் ஒருவர் கேட்டதற்கு, இந்தி தேசிய மொழி என உணவக ஊழியர் கூறியிருக்கிறார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பெண், இதுதொடர்பாக அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும் இந்த நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து #rejectkfc என்ற ஹேஷ்டேக்கும் இந்தியளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
மேலும் சொமேட்டோவுக்கு தமிழர்கள் பாடம் கற்பித்ததை போல் கே.எஃப்.சிக்கு கன்னடர்கள் பாடம் புகட்டுவோம் என்றும், இந்தியாவுக்கென்று எந்த தேசிய மொழியும் கிடையாது என்றும் இணையவாசிகள் தங்களது கண்டனக் குரல்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நமக்கு விளக்கமளித்துள்ள KFC நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "தற்போது பரப்பப்படும் இந்த வீடியோ பழையது. KFC நிறுவனம் அனைத்து சமூகங்களின் கலாச்சாரங்களின் மீதும் மிகுந்த மரியாதையைக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஒரு பிராண்டாக, எங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதும் ஒரே மாதிரியான KFC அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்வது எங்கள் கடமையாகும். தற்போது எங்களிடம் உரிமம் பெற்ற ஒரு பொதுவான பிளேலிஸ்ட் உள்ளது. நாடு முழுவதும் உள்ள KFC உணவகங்களில் அதுவே ஒலிபரப்பப்படுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.