இந்தியா

கொரோனாவால் மட்டும்தான் இந்தியாவின் கடன் அதிகரித்ததா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்திய குடும்பங்களின் கடன்கள் கொரோனாவுக்கு முன்பே அதிகரித்திருந்தன என்று கடன் கொள்கை தொடர்பான நிறுவனத்தின் ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் மட்டும்தான் இந்தியாவின் கடன் அதிகரித்ததா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்பே, குடும்பச் செலவுக்கான கடன்கள் மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்திருப்பது ‘துவாரா ரிசர்ச்’ (Dvara Research) என்ற கடன் கொள்கை தொடர்பான நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய குடும்பங்களின் சொத்துக்கள், கடன்கள் சேமிப்புகள், நுகர்வு மற்றும் நிலம் அல்லது சொத்து போன்ற மூலதனச் செலவுகள் பற்றிய தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அமைப்பு அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு கணக்கெடுப்பு (All India Debt and Investment Survey - AIDIS) ஆகும்.

இந்த அமைப்பு 2019-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வுத் தரவுகளையும், தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் தரவுகளையும் (National Sample Survey) அடிப்படையாகக் கொண்டு ‘துவாரா ரிசர்ச்’ (Dvara Research) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்தான், 2012 முதல் 2018 வரையிலான காலத்தில் - அதாவது கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்னரே இந்திய குடும்பங்களின் கடன் பெருமளவிற்கு அதிகரித்து இருப்பதை கண்டறிந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2008-இல் 43 சதவிகிதமாக இருந்த குடும்பங்களின் கடன் அளவு, 2016-இல் 31 சதவிகிதமாக குறைந்தது.

ஆனால், இது கடந்த 2019-இல் 32.5 சதவிகிதமாகவும், 2020-21-இல் 37.3 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் இந்தக் கடன்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) ஒரு பங்காக குடும்ப செலவினக் கடன் அளவிடப்படுகிறது என்ற வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குடும்பக் கடன்களின் பங்கு 60 சதவிகிதத்தைத் தாண்டும்போது, அது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அது சுட்டிக்காட்டி உள்ளது.

மிக முக்கியமாக நகர்ப்புறங்களைக் காட்டிலும், கிராமப்புற குடும்பங்களின் கடன் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புற குடும்பங்களின் நிலுவைக் கடன் 42 சதவிகிதமாகவும், கிராமப்புற குடும்பங்களின் நிலுவைக் கடன் 84 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. எனினும் கடன்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக கிராமப்புற குடும்பங்களை விட நகர்ப்புற குடும்பங்களே இருப்பதாகவும் ஆய்வு கூறியுள்ளது. கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு போதுமான சொத்துக்கள் இவர்களிடம் இல்லாததே அதற்குக் காரணம் என்று மதிப்பிட்டுள்ளது.

அதே போல, ஆண்கள் தலைமையிலான குடும்பங்களைக் காட்டிலும், பெண்கள் தலைமையிலான குடும்பங்களில் சராசரியாக கடன் மற்றும் நிலுவையில் உள்ளகடன்கள் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளது. கிராமப்புறங்களை எடுத்துக் கொண்டால், ஆண்கள் தலைமையிலான குடும்பங்களில் சராசரி கடன் 36 சதவிகிதமாக (சராசரி கடன் ரூ. 63,480) இருக்கும் நிலையில், பெண்கள் தலைமையிலான குடும்பங்களில் 28 சதவிகிதமாக (சராசரியாக ரூ.35,100) மட்டுமேகடன் அளவு உள்ளது. நகர்ப்புறங்களில் ஆண்கள் தலைமையிலான குடும்பங்களில் கடன் 23 சதவிகிதமாக (ரூ.1.3 லட்சம்) என்றால், இங்கும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் கடன் 18 சதவிகிதமாக (ரூ. 67,732) குறைவாகவே உள்ளது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பிரிவுகளில் பெரும்பாலான கடன் அளவுகளில் தென் மாநிலங்கள் நாட்டின் மற்ற பகுதிகளை விட முன்னணியில் உள்ளன. குறிப்பாக கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் புள்ளி விவரங்கள் அதிகமாக உள்ளன.

banner

Related Stories

Related Stories