உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் காரைவிட்டு மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கை உத்தர பிரதேச பா.ஜ.க அரசு சரியாக கையாளவில்லை என உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை போலிஸார் தாமதப்படுத்துவதாக உத்தரப்பிரதேச அரசை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடுமையாகச் சாடியுள்ளது.
வழக்கு விசாரணை தொடர்பாக உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், அறிக்கையை கடைசி நிமிடத்தில் தாக்கல் செய்தால் அதை நாங்கள் எப்படி படித்து பார்க்க முடியும் எனக் கேள்வி எழுப்பி குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன் தாக்கல் செய்யுங்கள் என அறிவுறுத்தியது.
மேலும், இந்த வழக்கில் மொத்தமுள்ள 44 சாட்சிகளில் 4 சாட்சிகளிடம் மட்டுமே வாக்குமூலம் பதிவு செய்திருக்கிறீர்கள். மற்றவர்களிடம் ஏன் வாக்குமூலம் பெறவில்லை எனவும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உ.பி. அரசு தரப்பு வழக்கறிஞர், வாக்குமூலம் பெறுவதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது. முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இவ்வழக்கின் அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களையும் அரசு பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என்றும், காவல்துறை அவர்களிடம் கேள்வி கேட்டு வாக்குமூலம் பெறாதவரை, நாங்கள் இந்த விவகாரத்தில் மேலும் எதுவும் பெற முடியாது. இது ஒரு முடிவற்ற கதையாக இருந்துவிடக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, விரைந்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, வரும் 26-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.