உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள கோசைங்காஜ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இந்திரா பிரதாப் சிவாரி. பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 1990ம் ஆண்டு போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி அயோத்தியாவில் உள்ள சாகெத் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இதனை அறிந்த அக்கல்லூரி முதல்வர் யதுவன்ஷ் ராம் திருப்பாதி, 1992ம் ஆண்டு இந்திரா பிரதாப் திவாரி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூஜா சிங் இறுதித் தீர்ப்பு வழங்கினார். இதில் போலி சான்றிதழ்களைக் காட்டி பா.ஜ.க எம்.எல்.ஏ இந்திரா பிரதாப் திவாரி கல்லூரியில் சேர்ந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே அவரை குற்றவாளி என அறிவித்து ரூ.8 ஆயிரம் அபராதத்துடன் 5 ஆண்டு சிறைத் தண்டனையை வழங்கி நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்றார். மேலும் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே வழக்குத் தொடுத்த கல்லூரி முதல்வர் திருப்பாதி உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.