கேரள மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. சாலைகளில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது
கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் கூட்டிக்கல் பகுதியில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் இழுத்துச் செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்.
அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காணாமல் போயிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. கூட்டிக்கல் பகுதியின் கவளியில் உள்ள தேவாலயத்தின் அருகில் வசித்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கிளாரம்மா ஜோசப் (65) என்ற பெண்மணியின் மகன் மார்ட்டின் (48), மருமகள் சினி (37), பேரப் பிள்ளைகள் சோனா (110, ஸ்நேகா (13), சாண்ட்ரா (9) ஆகியோர் பலியாகியுள்ளனர்.
கிளாரம்மாவின் வீட்டுக்கு அருகேயுள்ள மூன்று வீடுகளும் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. இதேபோல கோட்டயத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கேரளாவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.