டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசோ எல்லாம் நன்றாக இருப்பதுபோல் காட்ட முயன்று வருகிறது.
பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதே உதாரணமாக இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக மட்டுமே உருவாக்கப்படவில்லை. சமூக முன்னேற்றத்திற்காக பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டவை.
கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் காங்கிரசின் மறுமலர்ச்சியை விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு ஒற்றுமை மற்றும் கட்சி நலன்களை முதன்மையாக வைத்திருப்பது அவசியம் ஆகும்.
கட்சி தலைமையிடம் ஊடகங்கள் வாயிலாக பேச வேண்டாம். பிரச்சினை எதுவாக இருந்தாலும் நேர்மையான, வெளிப்படையான விவாதத்திற்கு தயாராக இருக்கிறேன். நாம் அனைவரும் நேர்மையாக விவாதிப்போம்.
நாம் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் நாம் ஒற்றுமையாக இருந்தால், கட்சி நலனில் மட்டும் கவனம் செலுத்தினால் நம்மால் சிறப்பாகச் செயல்பட முடியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அது பயன்மிக்கதாக அமையும்.
நான் சொல்வதற்கு நீங்கள் அனுமதித்தால் நான் காங்கிரஸ் கட்சியின் முழுநேர தலைவராகச் செயல்படுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.